top of page

கிறிஸ்தவர்கள் பொழுதுபோக்குகளை எவ்வாறு எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதற்கான வேதாகம வழிகாட்டுதல்


“மச்சான் நேற்று ஒரு படம் பார்த்தன்டா! சட்டபடி மூவிடா!”, “மச்சி, இந்த பாட்ட கேட்டுப்பாரேன், வேற லெவல் ரொமான்டிக் சோங் டா!”, “அடேய் நீ அந்த வெப் சீரீஸ் பார்க்குறனியா? செம த்ரில்லர் சீரிஸ்டா, நெக்ஸ்ட் வீக் எபிசோட் பார்க்க மரண வெய்டிங்!”.


இதனை வாசிக்கின்ற நீங்கள் ஒரு இளைஞனாயிருந்தால் இந்த உரையாடல்களை நீங்கள் பேசுபவராகவோ அல்லது உங்கள் நட்பு வட்டாரத்தில் இதனை கேட்டிருக்கவோ வாய்ப்புள்ளது. இன்றைய இளைஞர்கள் மத்தியில் பொழுதுபோக்குகள் முக்கிய இடத்தை வகிக்கின்றன என்பதை இவை எமக்கு எடுத்துக் காட்டுகின்றன. இளைஞர்கள் மாத்திரமல்ல பெரும்பாலும் எல்லா வயது பிரிவினரும் பொழுதுபோக்கை விரும்புகிறவர்களாக இருக்கின்றனர். பொழுதுபோக்குகள் அல்லது கேளிக்கைகள் “மக்களை மகிழ்விக்க பயனப்டுத்தப்படும் திரைப்படம், இசை, முதலியன” என்பது அகராதிகள் எமக்கு தருகின்ற விளக்கமாகும். இதனடிப்படையில் பார்க்கின்ற போது, மகிழ்ச்சியை அல்லது இன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்கிற உள்ளுணர்வு எல்லாருக்குள்ளும் இருப்பதால் பொழுதுபோக்குகளை மக்கள் நாடிச்செல்வது ஒரு ஆச்சரியமான விடயமல்ல என்பது நிரூபணமாகிறது. இது மட்டுமல்லாது பெருமளவிலான நிகழ்கால கிறிஸ்தவரக்ளின் வாழ்க்கைமுறையோடும் இந்த பொழுதுபோக்குகள் ஒரு அங்கமாக மாறி இருப்பதை யாராலும் மறுக்க முடியாது.


“சினிமா படம் பார்க்கலாமா? சினிமாப்பாட்டு கேட்கிறது சரியா? தப்பா?” போன்ற கேள்விகளை கிறிஸ்தவ வாலிபர்கள் தங்களை வழிநடத்தும் தலைவர்களிடம் கேட்பது வழக்கமாகும். அவர்களுக்கு இவ்வாறான கேள்விகள் எழக்காரணம், அவற்றை கிறிஸ்தவரக்ள் பார்க்கவோ கேட்கவோ கூடாது என்றும் அவ்வாறு செய்வது பாவம் என்றும் அவர்களுக்கு சிறுவயதிலிருந்து போதிக்கப்பட்டு வந்தபோதிலும், அவற்றின் மீது அவர்களுக்கு இயல்பாகவோ அல்லது தங்கள் நண்பர்களின் அழுத்தத்தினாலோ ஏற்படும் ஈர்ப்பு அவர்களை வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ அவற்றை பார்க்கவோ கேட்ககவோ தூண்டிவிடுகின்றன. மேலும் இவ்வாறு அவர்களுக்கு ஒரு காரியத்தை செய்யக்கூடாது அல்லது அவற்றில் ஈடுபடக்கூடாது என்று காரணகாரியங்கள் இல்லாமல் பொதுப்படையாக சொல்வதால், அவர்களின் உள்ளுணர்வும் அவற்றிற்கான சூழ்நிலையும் சாதகமாக அமையும் போது அவற்றை அவர்கள் செய்துவிடுகின்றனர் அல்லது அவற்றில் ஈடுபடுகின்றனர். ஆகவே இந்த ஈர்ப்பும் அழுத்தமும் வாலிப வயதில் அவர்களால் தவிர்க்கமுடியாததொன்று என்பதை நாம் ஏற்றுக்கொளள் வேண்டும்.


அதேவேளையில் நவீன தொழில்நுட்ப உலகில் வாழ்ந்துகொண்டிருக்கிற நாம் ஒரு உண்மையைப் புரிந்துகொளள்வேண்டும். இன்று திரைப்படங்கள், பாடல்கள், தொலைகாட்சி, இணைய தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகள் போன்றவை ஒரு பொழுதுபோக்காக மக்களை மகிழ்விப்பதைத் தாண்டி, அவை மக்கள் தங்கள் கருத்துகக்ளை வெவ்வேறு வடிவங்களில் உலகிற்கு வெளிப்படுத்துவதற்கான ஊடகமாக மாறியுள்ளன. கிறிஸ்தவர்களும் தங்கள் நம்பிக்கைகளையும் விழுமியங்களையும் திரைப்படங்கள் வாயிலாகவும் பாடல்கள் மூலமாகவும் மற்றவரக்ளுக்கு தெரிவிக்கின்றனர். எனவே இப்பொழுதுபோக்குகள் அனைத்தையும் பொதுப்படையாக பாவம் என்றோ அவற்றை பார்க்கவோ கேட்கவோ கூடாதென்றோ சொல்லிவிட முடியாது. அவற்றின் நோக்கம், உள்ளடக்கம், விளைவுகளை அடிப்படையாகக் கொண்டே ஒரு தீர்மானத்திற்கு எம்மால் வர முடியும். உதாரணமாக, நல்ல விழுமியங்களை வலியுறுத்துகின்ற மதசார்பற்ற திரைப்படங்களும் உண்டு. அதேவேளையில் வேதத்திற்கு புறம்பான சத்தியத்தை போதிக்கின்ற கிறிஸ்தவ நிகழ்ச்சிகளும் உண்டு என்பதை நாம் அறிவோம்.


அப்படியானால் கிறிஸ்தவர்கள் பொழுதுபோக்குகளை எவ்வாறு எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற கேள்வி நமக்குள் எழுகின்றது. இதற்கான பதிலை விவாதிக்க முன்பு, கிறிஸ்தவரக்ளாகிய நாம் ஒரு சத்தியத்தை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். இவ்வுலக வாழ்க்கையில் கிறிஸ்து நம்மை அனைத்து பாவ அடிமைத்தனத்திலிருந்தும் விடுதலையாக்கி (ரோமர் 6:14,18,22), பரிபூரண வாழ்க்கையையும் (யோவான் 10:10), அவருக்குள்ளாக சுயாதீனத்தையும் நமக்குக் கொடுத்திருக்கிறார் (கலாத். 2:4; 5:1,13). அதாவது தெரிவு செய்யும் சுதந்திரத்தை நாம் பெற்றிருக்கிறோம். அதேவேளையில் கிறிஸ்துவை பின்பற்றி வாழ்கின்ற வாழ்க்கையானது சட்டத்திட்டங்களை அடிப்படையாகக் கொண்டதல்ல, மாறாக தேவனுடனான நம்முடைய உறவு மற்றும் அவர் நம்முடைய வாழ்க்கைக்காக வைத்துள்ள அவரது நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டதாகும் என்பதை நாம் மறக்கக்கூடாது (மத்தேயு 22:37-39; 28:18-20). ஆகவே பொழுதுபோக்குகளை எவ்வாறு எடுத்துக்கொள்வது என்ற கேள்விக்கு விடைகாணும் போது இந்த உண்மைகளை நாம் கருத்திற்கொள்வது மிகவும் முக்கியமாகும்.


20 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஃப்ராங் போரம் எனும் பப்டிஸ்ட் சபையைச் சேர்ந்த பிரசங்கியாரும் இவ்வாறு கூறுகிறார், “உங்களது இறுதி இலக்கிலிருந்து உங்களைத் திசைதிருப்பாமல், நலிவடையச்செய்யாமல், அல்லது நிலைகுலையப்பண்ணாமல் உங்களைப் புத்துணர்ச்சியடைச் செய்யும் எதுவும் நியாயமான இன்பமாகும்.” இவற்றினடிப்படையில் மேற்கண்ட கேள்விக்கான பதிலை காணும் முயற்சியில் இதனோடு தொடர்புடைய சில நடைமுறை ரீதியான கேள்விகளைக் கேட்டு அதற்கான பதில்களை பெற்றுக்கொளவ்து அவசியமாகிறது. முதலாவதாக, குறிப்பிட்ட பொழுதுபோக்கானது எனது சிந்தனையில் ஆதிக்கம் செலுத்துமா?


அதன் மூலம் என்னை ஒரு பாவத்தைச் செய்யத் தூண்டுமா? என்பதை நாம் கவனமாக ஆராய வேண்டும். உதாரணமாக, திருமணத்திற்கு முந்தைய பாலியல் உறவு தவறில்லை என்று ஒரு திரைப்படமோ அல்லது ஒரு பாடலோ போதிக்குமாயின் அது நமது சிந்தனையில் ஆதிக்கம் செலுத்தி அவ்வாறான பாவத்தை செய்ய நம்மைத் தூண்டக்கூடும். ஏனென்றால் ஒவ்வொருவரினதும் உடல், உள, ஆவிக்குரிய ரீதியான முதிர்ச்சி மட்டம் வித்தியாசமானது. ஆதலால் பலிவீனமானவர்கள் (உதாரணமாக, பதின்வயதினர், புதிய விசுவாசிகள், குறிப்பிட்ட விடயத்தில் பலவனீமானவர்கள்) இதுபோன்ற திரைப்படத்தை பார்ப்பதால் இடறலடைந்து அப்பாவத்தை செய்ய அதிக வாய்ப்புள்ளது. ஆகவே அப்படிப்பட்டவர்கள் இவ்வாறு மனதையும் சரீரத்தையும் பாதிப்புக்குள்ளாக்கி பாவம் செய்யத்தூண்டும் பொழுதுபோக்குகளை கூடுமானவரை தவிர்ப்பதே நல்லது.


இரண்டாவதாக, குறிப்பிட்ட பொழுதுபோக்கானது தேவனுக்கும் எனக்கும் இடையிலான உறவுக்கும், என்னைச் சேர்ந்தவர்களுக்கும் எனக்கும் இடையிலான உறவுக்கும் நான் முன்னுரிமை கொடுப்பதைத் தடுக்கின்றதா? என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். உதாரணமாக, ஜெபிப்பதற்கும், வேதத்தை தியானிப்பதற்கும், பெற்றோரோடு கதைப்பதற்கும், பிள்ளைகளோடு விளையாடுவதற்கும், வாழ்க்கைத்துணைக்கு உதவிசெய்வதற்கும் நான் முன்னுரிமை கொடுக்காமல் அந்நேரத்தில் ஒரு இணையதள காணொளியையோ அல்லது இணைய தொடரையோ பார்க்கின்றவனாக இருக்கலாம். ஏனென்றால் இயந்திரமயமான உலகில் இயந்திரம் போல இயங்கும் நாம் இளைப்பாற செலவிடும் நேரத்தை பெரும்பாலும் தனியாகவே செலவிடுகிறோம். இன்று பொழுதுபோக்குகள் அனைத்தும் கையடக்க தொலைபேசிக்குள் வந்துவிட்டதால் குடும்பமாக ஒரு தொலைகாட்சி நிகழ்சசியை பார்த்த காலம் கடந்து தனித்தனியே அறைக்கதவுக்குள்ளிருந்து பார்க்கின்ற காலத்தில் வாழ்கிறோம். அவை தேவனுக்கும் உறவுகளுக்கும் முன்னுரிமை கொடுக்காதபடி நம்மைத் தனிமைப்படுத்தி தேவனைவிட்டும் உறவுகளைவிட்டும் எம்மைத் தூரவாக்கியுள்ளன. ஆதலால் அவற்றை எமது கட்டுபாட்டுக்குள் வைத்திருப்பது அவசியமாகும்.


மூன்றாவதாக, குறிப்பிடட் பொழுதுபோக்கானது தேவன் எனது வாழ்க்கைகாக வைத்திருக்கும் குறிப்பான நோக்கத்தில் நான் பயணிப்பதற்கு எனக்கு இடையூறாக இருக்கின்றதா? என்பதை நாம் கவனித்துப் பார்க்க வேண்டும். உதாரணமாக, எனது நிகழ்கால நோக்கமானது கல்வி கற்பதாகவோ, வேலை செய்வதாகவோ அல்லது ஊழியம் செய்வதாகவோ இருக்குமானால் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதை விடுத்து சமூக வலைதளங்களில் நான் நேரத்தைச் செலவழிக்க வேண்டுமென்கிற ஆசையும் அழுத்தமும் எனக்கு ஏற்படலாம். ஏனென்றால் சமூக வலைத்தளங்கள் மீதான ஈடுபாடு இக்காலத்தில் வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரையும் ஆக்கிரமித்துள்ளது. அவை நமது நேரத்தை அபகரிப்பதோடு எமக்கு கவனச்சிதறல்களை ஏற்படுத்தி எமது நோக்கத்தை விட்டு எம்மை வழிவிலகச்செய்து விடுகின்றன. ஆதலால் தேவைகருதி அவற்றை அளவோடு பாவிப்பதே புத்திசாலித்தனமாகும்.


இறுதியாக, நாம் தெரிவுசெய்கின்ற பொழுதுபோக்குகள் மேற்கூறிய மூன்று காரணிகளைக் கடந்து நமக்கு சந்தோஷத்தையும் புத்துணர்ச்சியையும் உறவுகளுக்கிடையிலான ஐக்கியத்தையும் தரும்பட்சத்தில், அவ்விதமான சந்தோஷத்தை நாம் ஆராதிக்கின்ற தேவன் பறிக்கின்றவருமல்ல, அவற்றை அனுபவிக்க தடை பண்ணுகின்றவருமல்ல. ஏனென்றால் நாம் இவ்வுலகத்திலிருந்து வேறுபிரிக்கப்பட்டவர்களாக இருந்தாலும் இவ்வுலகத்திலேயே தேவன் அனுமதிக்கும் காலம்வரை வாழவேண்டியவர்களாக இருக்கின்றோம் என்பதை அவர் அறிவார். ஆதலால் எவ்விதமான சந்தோஷம் சரியானது மற்றும் எந்த ஆசீர்வாதம் நன்மையானது என்று அவர் நமக்கு வழிகாட்டுகிறவராக இருக்கிறார். அதற்காகவே பரிசுத்த ஆவியானவரையும் வேதாகமத்தையும் நமக்குக் கொடுத்திருக்கிறார் (யோவான் 16:8; 2 தீமோத். 03:16-17). எனவே நாம் பொழுதுபோக்குகள் அனைத்தும் பாவம் என்கிற பொதுவிதியை உண்டாக்காது, தேவன் நமக்கு கொடுக்கின்ற வழிகாட்டுதலின்படி அவற்றை நாம் எடுத்துக்கொள்ளக்கடவோம்.

24 views

Support this cause

bottom of page